ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கொழும்பு பேராயர் பேரருட்திரு கலாநிதி மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கடந்த காலங்களில் தாம் வெளியிட்ட அறிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதைப் போன்று, தான் குறிப்பிடாத விடயங்கள் மேற்கோள் காட்டப்பட்டமை குறித்துக் கவலை அடைவதாக பேராயர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமது தலைமைத்துவம் வழிகாட்டல்களை மாத்திரமே வெளிப்படுத்துவதாகவும் எந்தவகையிலும் அதில் அரசியல் பங்கு இல்லை எனவும் தெரிவித்துள்ள பேராயர், எனவே கட்சி அரசியலில் தொடர்புபடுவதற்கு விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எந்த வேட்பாளருக்கு வேண்டுமானாலும் வாக்களி்ப்பதற்கான சுதந்திரம் கத்தோலிக்க சமூகத்தினருக்கு இருப்பதாகவும் பேராயர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் கத்தோலிக்க மக்கள் வாக்களிக்கவேண்டிய பொறுப்புணர்வை நினைவுபடுத்தியுள்ள கொழும்பு பேராயர், வாக்களிப்பதைத் தவிர்ப்பதன்மூலம் ஒருவரின் சமூகப் பொறுப்புணர்வை ஏற்பதனை மறுப்பதற்கு ஒத்ததாக அமைந்துவிடும் எனவும் கூறியுள்ளார். நாட்டை யார் வழிநடத்துவது என்பதைத் தீர்மானிப்பதற்கு இறைவன் கொடுத்த பொறுப்பை நிறைவேற்றும் அதேவேளை, திருச்சபையின் எண்ணக்கருவுக்கு அமைய விசுவாசத்தின் அடிப்படைகளைக் கவனத்தில் கொள்வது அவசியம் எனவும் பேராயர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை உறுதிசெய்யும் வகையில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் செயற்படவேண்டும் எனவும் பேராயர் அறைகூவல் விடுத்துள்ளார்.
நாட்டிற்காக முன்வைத்துள்ள திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்குவதற்கான நடவடிக்கைகளை வேட்பாளர்கள் முன்னெடுக்கவேண்டும் எனவும் பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார். செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதுடன், முக்கியமாக வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு எத்தகைய நிரந்தர அரசியல் தீர்வு காண விரும்புகின்றார்கள் என்பது குறித்தும், ஜனநாயகத்தை எவ்வாறு ஊக்குவித்து நிலைநாட்டுவது மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியன தொடர்பாகவும் வேட்பாளர்கள் நிலைப்பாடுகளை வெளியிடவேண்டும் எனவும் பேராயர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.






