கப்பல் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் எரிபொருளை கடற்படையின் பாதுகாப்புடன் 24 மணித்தியாலமும் கரையேற்றுவதற்கு பெட்ரோலிய வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் விரயமான கோடிக் கணக்கான ரூபா நிதியை மீதப்படுத்த முடியுமென அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இதுவரை காலமும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே எரிபொருளைக் கரையேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏற்படும் தாமதம் காரணமாக ஒரு கப்பலுக்கு ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபாவை அரசாங்கம் செலவிட்டு வந்துள்ளது.
24 மணித்தியாலமும் எரிபொருளைக் கரையேற்றும் புதிய நடவடிக்கை மூலம் பெருமளவு நிதியை மீதப்படுத்த முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் இறக்கப்படும் நடவடிக்கைகளை நேரில் சென்று அமைச்சர் பர்வையிட்டார். இதன்போது ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டதுடன் எரிபொருள் இறக்குமதி நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் அவர்களுக்கு விளக்கமளித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த :-
கடந்த கால பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக எரிபொருளை இறக்கும் நடவடிக்கைகள் பகல் நேரங்களிலேயே இடம்பெற்றன.இரவில் பாதுகாப்புக் காரணங்களுக்காக எரிபொருள் கப்பல்கள் துறைமுகப் பகுதியிலிருந்து தூரத்துக்குச் சென்றுவிடும்.
இதனால் எரிபொருள் இறக்கும் நடவடிக்கைகள் தாமதமானதுடன் மூன்று நாட்களில் நிறைவு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் 6 நாட்களுக்குத் தொடரும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் அமெரிக்கன் டொலர்கள் விரயமானது.இவ்வாறு மூன்று தினங்கள் மேலதிகமாக கழிவதனால் 120 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் விரயமாகும்.
ஒரு வருடத்திற்கு ஒப்பிடும் போது பெருந்தொகையொன்றை தற்போது மீதப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்த நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சர் அதனையடுத்து முத்துராஜவெல மசகு எண்ணெய் நிலையத்தையும் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






